Thursday, November 29, 2007

சமண அவதூறுகள் - 1

சமண அவதூறுகள் - 1

தேனினினும் இனியது நம் தமிழ் மொழி. அம்மொழியின் வளர்ச்சிக்கு
அரும்பாடுப்பட்டோர் பலர். அவர்களுள் சமணர்கள் தனித்துவம்
மிக்கவர்கள். ஆம். தமிழின் இனிமையைத் தனியாய் உணர்ந்தவர்கள்
அவர்கள். இதனாற்றான் ஒரு புலவன்,

"கொல்லா விரதம் பூண்ட நலத்தோர்
அறிவால் நிறைந்த அறமாண்புடையோர்
தமிழினிதருமை தனியா யுணர்ந்தோர்
கருவிநூற் காவியம் கழறும் பெரியோர்
கால கதியாற் கடை நிலைப்படுவோர்
தம் வயப்படுவது சமணகாலம்
" - தனிப் பாடல்

அந்தச் சமண காலத்தில் எழுந்த தமிழ் நூற்கள்தான் எத்தனை!
எத்தனை!! ஐம்பொரும் காப்பியங்களில் மூன்றையும்,
ஐஞ்சிறுங்காப்பியங்களில் ஐந்தையும் வழங்கி தமிழன்னைக்கு
அழகுப் பார்த்தது சமணம்! அதுமட்டுமா? தமிழுக்கு முதல் முதல்
இலக்கணம் (தொல்காப்பியம்) கண்டது சமணமே. அவ்வளவு ஏன்?
நாம் இப்போது பயன்படுத்துவதும் சமண இலக்கணமே!!
(நன்னூல்).

இவையனைத்தும் நமக்கு அருளினோர் சமணர்களேயாவர்.
அதுவும் பிறப்பால் தமிழ்ச் சமணர்கள். இவர்களுக்கு தமிழ்
நாட்டில் விளைந்த இன்னல்கள் ஏராளம்! ஏராளம்!! எதற்காக
இந்த இன்னல்கள்? அதற்கு நிறைய காரணங்கள் இருந்த
போதும், மிக முக்கியமானதாக ஒரே ஒரு காரணத்தை கூறுவோம்!


அந்த முக்கியக் காரணம். வைதிக வேதத்தை எதிர்த்ததுதான்.
வேதத்தை ஏன் எதிர்க்கவேண்டும்? யாகம் என்ற பெயரால்
அப்பாவி உயிர்களை பலியிட்டது வைதிக வேதம். யாகத்தில்
மிருகங்கள் பலியிடுவதன் மூலம் அவை நற்கதியே அடைகின்றன
என்று அச்செயலுக்கு அவை நியாயமும் கற்பிக்க முனைந்தன.

இதனை எதிர்த்து எழுந்ததுதான் தமிழ்மறை!


"அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று
" - திருக்குறள் (259)


சமணம் உயிரின்பாற்ப் பட்டது. எல்லா உயிரும் ஒன்றே! உயிர்களில்
ஏற்றத் தாழ்வுகள் இல்லை. உயிர்கள் தங்கள் தங்கள் செயல்களினாலே
உயர்வும், தாழ்வும் அடைகின்றன. பிறப்பினால் உயர்வு தாழ்வை
அவை என்றுமே ஏற்றுக்கொண்டதில்லை.


"பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும்.." - திருக்குறள் (972)

என்றும்,


"பறையன் மகனெனினும் காட்சி யுடையான்
இறைவன் எனஉணரற் பாற்று
" - அருங்கலச் செப்பு (37)


என்றது. நீலகேசி,(கி.பி. நான்காம் நூற்றாண்டு) என்னும் நூலில்
இதுப்பற்றி கூறியதைப் படித்துக் கொள்க.


சுருக்கமாக, சொல்வோமானால் சமணம் திட்டமிட்டு அழிக்கப்பட்டது!
வேதமதம் வேளாளச் சைவத்தை கூட்டு சேர்த்துக் கொண்டு
சமண மதத்தை அழிக்கத் தலைப்பட்டது. சமணத்தைப் பற்றிய
அவதூறுகளை மக்களிடையே பரப்பப்பட்டன. இப்பொய் பிரசாரத்தை
மக்களும் நம்பலானார்கள். சமணர்கள் எழுதிய நூற்கள் அழிக்கப்பட்டன.
அவர்களுடைய நூற்கள் பிற சமய நூற்கள் ஆக்கப்பட்டன. அருகக்
கடவுள் வாழ்த்து விநாயகர் வாழ்த்தாக மாற்றப்பட்டது. அருகன்
கோயில்கள் சைவ, வைணவ கோயில்கள் ஆயின. இதில் வேடிக்கை
என்னவென்றால்? அதாவது, வேதமதம், சமணத்தை அழிக்க
சைவமதத்தை கூட்டு சேர்த்துக் கொண்டது என்று சொன்னேன்.
இல்லையா?

சமணம் வீழ்ந்ததும், வேதமதம் சைவத்தை அழித்தது. சைவ
வேளாளர்கள் தாழ்ந்துப் போனார்கள். சைவர்கள் நிறுவகித்து வந்த
கோயில்கள் வேதமதத்தினர் தம் வசப்படுத்தினார்கள். சைவ
வேளாளர்கள் ஒதுக்கப்பட்டு, அவர்கள் உரிமைகள் மறுக்கப்பட்டு
துரத்தப்பட்டார்கள். உதாரணம்: சிதம்பரம் கோயில்.


சரி. விடயத்திற்கு வருவோம். சமணத்தைப் பற்றிய அவதூறுகள்
என்னென்ன? அவைகள் உண்மைதானா? அதற்கு ஆதாரம்
என்ன? போன்ற கேள்விகளுக்கு விடைக்காண முயல்வது தான்
இக்கட்டுரையின் நோக்கம்.


சமண மதம் நாத்திக மதம் - அவதூறு ஒன்று!

சமண மதம் நாத்திகமா?

இந்த கேள்வியை தற்போதைய வலைஞர்களை கேட்டால்
பெரும்பாலோர் நாத்திகம் என்றுதான் பதில் அளிப்பார்கள்.
அவர்களைச் சொல்லி குற்றமில்லை. நடைபெற்று வந்த
பிரசாரத்தின் வலு அப்படி.


சமணம் ஆத்திகமே!


சமணம் இறைவனை, இறைமையை (இறைத்தன்மை) ஏற்றுக்கொள்ளும்
மதமே. அவ்வகையில் அது ஆத்திக மதமே!

சமணம் உயிரின்பால் பட்டது என்பதை முன்னமே சொன்னேன்.
எந்த ஒரு ஆன்மாவும் சுயரூபத்தில் இறைவன்தான். ஆனால்,
அவைகள் வினைத்துகள்களால் அழுத்தப்பட்டு தன்னிலை மறந்து
மடமையில் ஆழ்ந்திருகின்றன.

எந்த ஒரு ஆன்மாவும் முயன்றால் இறைவனாக முடியும்.

"தன்னில் பிறிதில்லை தெய்வம் நெறிநிற்பில்
ஒன்றானும் தான்நெறி நில்லானேல் - தன்னை
இறைவனாச் செய்வானும் தானேதான் தன்னைச்
சிறுவனாச் செய்வானும் தான்
" - அறநெறிச் சாரம் (77)


ஆனால், அது கர்த்தா வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
அஃதாவது, இவ்வுலகை யாரொருவரும் படைத்திலர்;
யாரொருவரும் காப்பவரும் அல்லர்; யாரொருவரும்
அழிப்பவரும் அல்லர்.

சற்று பொறுங்கள். கர்த்தா வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லையா?
அப்படியானால், அது நாத்திக மதம்தானே? என்று யாராவது
கேட்டலாம். இந்தியச் சமயங்கள் தவிர வேறு எந்த சமயமும்
இக்கேள்வியை கேட்டிருந்தால் யான் நாத்திக மதம் என்றுதான்
கூறியிருப்பேன். ஏன்னென்றால் அவர்கள் கூற்றுப்படி கர்த்தா
வாதத்தை ஏற்காத எந்த மதமும் நாத்திகம்தான். ஆனால்,
இந்திய மதங்களைப் பொருத்தவரை நாத்திகம் என்ற பேச்சுக்கே
இடமில்லை. இந்தியப் பழஞ்சமயங்களில் சரிபாதி நாத்திக
சமயங்கள்தான். தெரியாதவர்கள், தெரிந்தவர்களை கேட்டு
தெரிந்துக் கொள்ளுங்கள் :-)

பின் ஏன் சமணம் நாத்திகம் என்று ஏளனப்படுத்தப்பட்டது?
ஏன்னென்றால் சமணம் வேதத்தை எதிர்த்தனால்தான், சமணம்
நாத்திக மதம் என்று முத்திரைக்குத்தப்பட்டது. திராவிட சிசு
என்றழைக்கப்பட்ட திருஞான சம்பந்தர் பாடிய தேவாரமும்,
பெரியப் புராணமும்தான் அதற்கு சாட்சி. அங்கே படித்துத்
தெரிந்துக் கொள்ளுங்கள்.

காட்டுக்கள் சில:

"வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆதமில்லி அமனோடு தேரரை
வாதில் வென்று அழிக்கத் திருவுள்ளமே
"

"வேட்டு வேள்வி செய்யும் பொருளை விளி
மூட்டு சிந்தை முரட்ட மண் குண்டரை
ஒட்டி வாது செய்யத் திருவுள்ளமே
"

"அந்தணாளர் புரியும் அருமறை
சிந்தை செய்யா அருகர் சிரங்களை
சிந்தவாது செயத் திருவுள்ளமே
"

என்று சிவபெருமானை அழைக்கிறார்!


இரா.பானுகுமார்,
சென்னை.

20 comments:

Vassan said...

வணக்கம் பானுகுமார்.

சமணம் பற்றிய உங்களது இப்பதிவு மிகவும் அவசியமானது. மிக்க நன்றி.

மதம்,கடவுள் நம்பிக்கையற்ற எனக்கு,
எமது முன்னோர்களின் சமண மதத்திலேயே பிறந்து - இருந்திருந்தால் ஒரு வேளை ஏதொவொரு நம்பிக்கை வளர்ந்திருக்குமோ என எண்ணுவதுண்டு.

உங்களது பதிவு மூலம் ஓரளவு சமணம் பற்றி அறிந்திருக்கும் அடியேன், மேலும் அறிவை வளர்த்துக் கொள்ள விரும்புகிறேன்.

நா. கணேசன் said...

வணக்கம், பானு. வீட்டில் நீங்களும்,
அனைவரும் நலமா?

என்றும் உங்கள் வலைப்பதிவு விளங்கட்டும்!

2008-ன் முதல் வாரத்தில் தமிழ்மணத்தில் நட்சத்திரமாகப்
பதிவுகள் எழுத உள்ளேன்.
நிச்சயம் வருகை தாருங்கள்!


நா. கணேசன்

தமிழ்க்கொங்கு - என் வலைமலர்

Unknown said...

இறைமை என்பது பொது புத்தியில் ஆத்திகம் என நிறுவப்பெறும் எனவே மனிதநேயமே தமிழர் மதம்.

மதம் தாண்டி, மொழித்துறையில் சமணம் ஆற்றிய பங்கு தமிழறிந்த அனைவரும் மறுக்க முடியாத ஒன்று. சங்கம் அமைத்து வளர்ந்தது சமணர்களின் முயற்சியே.

இன்னமும் விரிவாகவும், ஆழமாகவும் நீங்கள் எழுத வேண்டும். தமிழ்நெட்.காம் தளத்தில் மதுரை திட்டத்தில் பழந்தமிழ் மின்னேடுகள் உள்ளது. புரட்டினால் மேலதிக தகவல்கள் அகப்படும். தொடருங்கள்.

Banukumar said...

திரு. வாசன் ஐயா,

தங்கள் வருகைக்கும், பின்னூட்டிற்கும், ஊக்கத்திற்கும் நன்றிகள் பல. தொடந்துப் படித்துவாருங்கள் ஐயா!


அன்புடன்,

இரா.பானுகுமார்,
சென்னை

Banukumar said...

அன்புசால் கணேசர் ஐயா,

வாருங்கள். நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.

நட்சத்திரப் பதிவை ஆவலுடன் எதிர்ப்பார்கிறேன்.

நன்றி!

இரா.பானுகுமார்,
சென்னை

Banukumar said...

வாருங்கள் இசை ஐயா!

தங்கள் பின்னூட்டிற்கு நன்றி!

தங்களின் நடுநிலையான கருத்திற்கு நன்றி. என் வலைப்பதிவின் நோக்கமே சமணப் பற்றிய தவறான கருத்துக்களை கலையவேண்டும் எனபதற்குத்தான். சமணம் பற்றி தற்போதைய வலைஞர்கள் அறிந்துக் கொள்ளவும் இவ்வலைப்பூவை எழுதுகின்றேன்.

தொடர்ந்துப் படித்து வாருங்கள். நன்றி!

இரா.பானுகுமார்,
சென்னை

Anonymous said...

எதற்கும் ஆதாரம் இல்லாமல் கண்டபடி எழுதிவிட்டு சமணத்தை அழித்தார்கள் என்று அவதூற்றை வேறு சொல்கிறார்கள். சமணம் ஆத்திகமா? உம் மூதாதையைப் போலவே நீரும் உளறிக் கொண்டிரும்!

Banukumar said...

அனானி அவர்களே,

தங்கள் வருகைக்கும், பாராட்டுரைக்கும் நன்றி.

இளநீர் அருந்துங்கள்! குளிர்க் காலத்திலும் தங்களுக்கு இளநீர் தேவைப்படுகிறது? ;-)

சமணம் ஆத்திகமா? நாத்திகமா? வாததிற்கு யான் தயார். ஆனால், அனல், புனல் எல்லாம் வேண்டாம்! என்ன யான் சொல்வது சரிதானே? :-)

இரா.பானுகுமார்,
சென்னை

வெத்து வேட்டு said...

what is "Samanam" ? Jainism?

Banukumar said...

ஐயா,

வணக்கம்.

வெத்து வேட்டு said...
what is "Samanam" ? Jainism?

சமணம், நிகண்டம், ஆருகதம், பிண்டியம்(ர்),ஜைனம்,அமணம், அனேகாந்தம் எல்லாம் ஒன்றே!

இரா.பானுகுமார்,
சென்னை.

Venkatasubramanian said...

பானு குமார் ஐயா

ஒவ்வொன்றாக தங்கள் பதிவுகளை படித்து வருகிறேன். இந்தப் பதிவில் தாங்கள் தங்களுடைய வழக்கம் போன்ற நுண் நிலையினின்றும் , நாடு நிலையினின்றும் வழிவி உள்ளீர்கள். உணர்ச்சி மேலோங்கி நிற்கிறது.

///அதாவது, வேதமதம், சமணத்தை அழிக்க
சைவமதத்தை கூட்டு சேர்த்துக் கொண்டது என்று சொன்னேன்.
இல்லையா?///

இது மிகவும் கேள்விக்குரிய ஒன்று. சைவ மதத்திற்கு ஆகமம் சிறப்பு நூல் என்றாலும், வேதமே முதல் நூல். பண்டைத் தமிழகத்தில் வேத மதம் (அதாவது) பிராமண ஸமூஹம் ) எந்த அளவு இருந்தது ? மதுரைக் கழுவேற்றலிலும் கூட மறவர்களும் வேளிரும் தான் ஒன்றுபட்டனர்.

அப்பர் வேளிர் குலத்து விளக்கு. மேலும் முன்னாள் சமணர். அவர் தான் சமணத்திற்கு எதிராக கொடி உயர்த்திய முதல் தமிழர். அவருக்கு பின்புலமாக பிராம்மணர் யாரும் இருந்ததாக நான் அறியேன். தமிழ் மன்னர் வேளிரா அல்லது வேதியரா ? அவர்கள் ஏன் சமணத்தை உதறினர் ? வெறும் பிரச்சாரம் என்று மட்டுமே அதை ஒதுக்கி விட முடியுமா ?

இன்னொன்று, சைவம் அதன் சொந்த பார்ப்பன அதிகாரிகளைக் கொண்டது. அவர்கள் சிவாசாரியார் அல்லது குருக்கள் அல்லது ஆதிசைவர் எனப்படுவர். இவர்கள் வேதியராயிருந்து சைவ வேதியர் ஆகியவர்கள். இன்றும் உள்ளனர்.

சமணத்தில் உள்ளூர இருந்த குறையே அதன் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். உங்கள் பதிவின் தூண்டுதலால் சமணத்தை கற்று விட்டு இதைப் பற்றி மேலும் பேசுவோம். ஒரு வேலை கால் கூறிய வாக்கியங்களைப் போன்றவைகளாலும் இருக்கலாம்.
//எந்த ஒரு ஆன்மாவும் முயன்றால் இறைவனாக முடியும்.//

இதனால் அபத்தங்கள் விளைந்திருக்கலாம்.

//பின் ஏன் சமணம் நாத்திகம் என்று ஏளனப்படுத்தப்பட்டது?
ஏன்னென்றால் சமணம் வேதத்தை எதிர்த்தனால்தான், சமணம்
நாத்திக மதம் என்று முத்திரைக்குத்தப்பட்டது//

ஸ்வாமி விவேகானந்தர் கூறினார். சமணமும் பௌத்தமும் வேதங்களை முழுமையாக எதிர்க்கவில்லை. ஒரு சில பகுதிகளை அவை ஹிம்சக ஸ்ருதிகள் என்று ஒதுக்கி வைத்தன- என்று. சென்ற நூற்றாண்டில் தயானந்தர் வேதத்தைப் பற்றி ஒரு பெரும் விளக்கம் தந்தார். அதில் உயிர்ப் பலி கொடுக்கும் யாகங்கள் தவறு மற்றும் வேத சம்மதம் அற்றவை என்றார். மேலும், இந்த பலி விவரம் எல்லாம் 'பிராம்மணங்கள்' எனப்படும் வேத விளக்கப் பகுதிகளில் காணப்படுபவை. இவை எழுதாக் கிழவி அல்ல ஆதலால் அவை சுத்த வேதம் அல்ல என்று தயானந்தர் நிராகரித்தார். இதற்கு அவர் பரந்த மேற்கோள்களும் காட்டினார். யாச்காசாரியர் போன்ற ஆதி கால வேத உரையாசிரியர்களின் கருத்தும் அதே. பார்க்க
(www.geocities.com/athens/ithaca/3440/books.html)

///தமிழகத்தில் சமணம் வீழ்ந்ததென்றால், பிற மாநிலங்களில் ஏன் மறைந்தது ?
இந்தியப் பழஞ்சமயங்களில் சரிபாதி நாத்திக
சமயங்கள்தான். தெரியாதவர்கள், தெரிந்தவர்களை கேட்டு
தெரிந்துக் கொள்ளுங்கள் :-///

நீங்கள் குழப்புகிறீர்கள். இந்தியப் பழஞ்சமயம் என்று உள்ளவை சனாதன தர்மமும், சமணமும் பௌத்தமும் தான். ஒரு வேலை நீங்கள் கூறுவது தரிசனங்களாக இருக்கலாம். சாங்கியமும், மீமாம்சையும் படைப்புக் கடவுளை ஏற்கவில்லை. ஒரு வேடிக்கை என்னவென்றால் அக்காலத்து வேதியர் ஆறு தரிசனங்களையும் பயின்றனர்.சங்கரர் மீமாம்சகரான மண்டன மிச்ரரை வாதில் வென்று தம் சீடராக்கினார் என்ற கதை உண்டே.

Anonymous said...

Banukumar,

Do you think, samanam is all perfect? and do you think, samanam did not interfere in other religions?

as per the tamil history, the samanars tried to eliminate gnana sambandar.. why should they do?

In my opinion, samanam has been one of the invading and proselytising religion just like christianity now..

Anonymous said...

Banukumar,

Do you think, samanam is all perfect? and do you think, samanam did not interfere in other religions?

as per the tamil history, the samanars tried to eliminate gnana sambandar.. why should they do?

In my opinion, samanam has been one of the invading and proselytising religion just like christianity now..

Unknown said...

Venkatasubramanian Sir,

Your explanation is Very nice.

Could you please explain me about kazhutral in madurai?

Venkatasubramanian said...

அன்புள்ள அய்யா
இந்த இடைப்பட்ட காலத்தில் நான படித்தவை திரு பானுகுமாரின் சூழ்ச்சி கோணத்தை முறியடிப்பனவாகவே இருந்தன. மதுரைக் கழுவேற்றம் என்பது திருஞான சம்பந்தருக்கும் சில சமணத் துறவிகளுக்கும் இடையே நடந்த சொற்போரின் விளைவு. அக்கால மரபின் படி தோற்றவர் கழுவேற வேண்டும். சம்பந்தர் தோற்றிருந்தாலும் இதே கதி தான்.

இதில் நம் சம காலத்தவர் வைத்த சுழி 'இந்த எண்ணாயிரம் " பேர் கழுவேறினர் என்பது. அதை யாரும் விளக்கவும் இல்லை. உண்மையில் எண்ணாயிரம் என்பது ஒரு குழு அல்லது சமண ஜாதி. அதைச் சேர்ந்த சிலர் கழுவேறினர் என்பதே உண்மை. இது இன்று நாத்திக மற்றும் ஹிந்து மத விரோதிகளால் எட்டாயிரம் என்ற எண்ணிக்கையாக திரித்துக் கூறப்பட்டுள்ளது.

திருநெல்வேலிப் பக்கம் அஷ்ட சஹாஸ்ரம் ( எண்ணாயிரம் ) என்ற பிரிவில் உள்ள பிராம்மணர் இன்றும் உள்ளனர். அவர்கள் தொகை இன்று லட்சத்துக்கு மேல் போகக் கூடும். சமணர்களில் எண்ணாயிரம் என்ற பிரிவு இருந்தது இந்த சுட்டி பார்க்கவும்

எண்ணாயிரம்

http://www.jeyamohan.in/?p=23008

வேங்கடசுப்ரமணியன்

புரட்சிக்கவி said...

திருஞான சம்பந்தர் எந்த தகிடி தத்தங்கள் எல்லாம் செய்து சமணர்களை கழுவேற்றினார் என்பதை, தேவாரத்திலிருந்தே மேற்கோள் காட்டி அருமையாக திருவாரூர் தங்கராசு என்பவர் விளக்கி உள்ளார். பகுத்தறிவுக்கு ஒவ்வாத புனல் வாதம்( தண்ணீரில் எதிர் நீச்சல் போட்டு வரும் ஏடு), அனல் வாதம் (நெருப்பில் போட்டால் எரியாமல் வரும் ஏடு) என்று பல கோல்மால்களை செய்தும், கூன் பாண்டியனின் உணவில் நச்சு கலந்தும் (அவன் மனைவியின் மூலமாக) அதற்கு முறிவினை சமணர்கள் மருத்துவ இயலின் படி கொடுக்க முயன்றும் நோய்முதல் நாடி முடியாமல்), அவாள் பின்பு நோய் முறிவு மருந்தினை திருநீறோடு சேர்த்து கொடுத்து சரி செய்ய, "மந்திரமாவது நீரு " என்று மன்னனை மயக்கி, பிரதி உபகாரமாக அரசின் துணை கொண்டு 8000 பேரை கழுவில் ஏற்றினர்.

அப்பர் இதனை எல்லாம் உணர்ந்து மறுபடியும் சமணம் ஆக முயன்ற போது, அவரை எரித்தனர். பதிலடியாக சமணர் தாக்குதலில் கல்யாண மண்டபத்தில் கொலுத்தப்பட்டவர்தான் திராவிட சிசு !!!!!

புரட்சிக்கவி said...

திருஞான சம்பந்தர் எந்த தகிடி தத்தங்கள் எல்லாம் செய்து சமணர்களை கழுவேற்றினார் என்பதை, தேவாரத்திலிருந்தே மேற்கோள் காட்டி அருமையாக திருவாரூர் தங்கராசு என்பவர் விளக்கி உள்ளார். பகுத்தறிவுக்கு ஒவ்வாத புனல் வாதம்( தண்ணீரில் எதிர் நீச்சல் போட்டு வரும் ஏடு), அனல் வாதம் (நெருப்பில் போட்டால் எரியாமல் வரும் ஏடு) என்று பல கோல்மால்களை செய்தும், கூன் பாண்டியனின் உணவில் நச்சு கலந்தும் (அவன் மனைவியின் மூலமாக) அதற்கு முறிவினை சமணர்கள் மருத்துவ இயலின் படி கொடுக்க முயன்றும் நோய்முதல் நாடி முடியாமல்), அவாள் பின்பு நோய் முறிவு மருந்தினை திருநீறோடு சேர்த்து கொடுத்து சரி செய்ய, "மந்திரமாவது நீரு " என்று மன்னனை மயக்கி, பிரதி உபகாரமாக அரசின் துணை கொண்டு 8000 பேரை கழுவில் ஏற்றினர்.

அப்பர் இதனை எல்லாம் உணர்ந்து மறுபடியும் சமணம் ஆக முயன்ற போது, அவரை எரித்தனர். பதிலடியாக சமணர் தாக்குதலில் கல்யாண மண்டபத்தில் கொலுத்தப்பட்டவர்தான் திராவிட சிசு !!!!!

Venkatasubramanian said...

இந்த பாண்டியர்களே இப்படித்தான். கண்ணகி மதுரையை எரித்த பின் பாண்டிய நாட்டில் மழை இல்லாமல் போகவே, ஆயிரம் பொற்கொல்லர்களைப் பலி கொடுத்து வேள்வி செய்தார்களாம். இது சிலப்பதிகாரமே சொல்கிறது. அரைப் பகுத்தறிவுவாதி வேங்கடசாமி நாட்டார் உரையில் , அதெல்லாம் இல்லை , வெறும் மாவினால் பிரதிமை செய்து பலியிட்டான் என்று சப்பைக் கட்டு உள்ளது.

எண்ணாயிரம் சமணர்கள் தான் அன்று இருந்தனரா ? அவர்களைக் கழுவேற்றின பிறகு பாண்டிய நாட்டில் சமணர்களே மிஞ்சவில்லையா ?

எது எப்படியோ, இப்போது பகுத்தறிவு வாதம் மறைந்து விட்டது. இப்போது அதன் உண்மை சொரூபமான ஜாதீய வாதம் மட்டும் உள்ளது. புரட்சிக் கவி பாண்டியர் த்ங்கள் வர்க்க சாதி என்று தெரிந்துமா சேம் சைட் கோல் அடிக்கிறார் ?

Anonymous said...

//கண்ணகி மதுரையை எரித்த பின் பாண்டிய நாட்டில் மழை இல்லாமல் போகவே, ஆயிரம் பொற்கொல்லர்களைப் பலி கொடுத்து வேள்வி செய்தார்களாம். இது சிலப்பதிகாரமே சொல்கிறது.//

இதை நம்புகிறீர்கள்.

//நம் சம காலத்தவர் வைத்த சுழி 'இந்த எண்ணாயிரம் " பேர் கழுவேறினர் என்பது. அதை யாரும் விளக்கவும் இல்லை. உண்மையில் எண்ணாயிரம் என்பது ஒரு குழு அல்லது சமண ஜாதி. அதைச் சேர்ந்த சிலர் கழுவேறினர் என்பதே உண்மை. இது இன்று நாத்திக மற்றும் ஹிந்து மத விரோதிகளால் எட்டாயிரம் என்ற எண்ணிக்கையாக திரித்துக் கூறப்பட்டுள்ளது
//

இதை நம்ப மாட்டீர்கள்!

நமக்குப் பிடித்த கருத்துக்கு ஒத்த கருத்தை மட்டும் நம்பலாமோ?

vijay Kannan said...

Hi Banu,

Good analysis ..
But we need to understand few things

Does samanam/jain exist as compulsion or like force to be jain unlike hinduism with freedom

Do you have idea on this ..then we can understand why jainism is not exist now